ஆதிலாபாத் மாவட்டத்தில் ஆதிவாசிகள் நிறைந்த லக்னாபூர் கிராமத்தில் சாலை வசதி கிடையாது. பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் அங்குள்ள வாகு ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டும். தற்போது பலத்த மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இந்த ஊரைச் சேர்ந்த மீராபாய் என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு நேற்று பிரசவவலி ஏற்பட்டது. வேதனையில் அவர் துடித்தார். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியவில்லை. உயிருக்கே ஆபத்தான நிலையில் துடித்த அந்த பெண்ணின் நிலைமையை கண்ட இளைஞர்கள் பரிதாபப்பட்டனர். அந்த பெண்ணை எப்படியாவது ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல நினைத்தனர்.
கொட்டும் மழையில் அந்த பெண்ணை கட்டிலில் கிடத்தினர். பின்னர் இளைஞர்கள் கட்டிலை தோளில் சுமந்து கழுத்தளவு ஆற்று தண்ணீரில் நீந்தினர்.
நடு ஆற்றை கடந்தபோது அந்த பெண்ணுக்கு திடீரென பிரசவம் ஏற்பட்டது. அவள் ஆண் குழந்தை பெற்றெடுத்தாள். கட்டிலை சுமந்து வந்த இளைஞர்களே அவளுக்கு பிரசவம் பார்த்தனர்.
பின்னர் கரை வந்து சேர்ந்ததும் அந்த பெண்ணுக்கு 2–வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர்.