siruppiddy

வியாழன், 18 டிசம்பர், 2014

இது ரஜினியைத் தாக்கும் அல்லது விமர்சிக்கும் பதிவல்ல.

நானும் ரஜனி ரசிகன்தான். ரஜினியின் பின்னனிச் செயல்பாடுகள் எனக்குத் தெரியாத வரைக்கும் நான் ரஜினியை எதுவும் சொல்லப் போவதில்லை. விமர்சிக்கவும் முடியாது. நான் கேட்பதெல்லாம் உங்களை நோக்கிதான்.

ஒரு வாரத்திற்கு முன்பிருந்து அவரது பிறந்தநாளை விளம்பரப்படுத்தி இங்கிருக்கும் மீடியாக்கள் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? அவரது புகழைத் தங்கள் வியாபாரத்திற்குப் பயன்படுத்திக்கொள்கின்றார்கள். இங்கும் அது அவர்கள் தவறில்லை.

ஏமாறும் கடைசி மனிதன் இருக்கும் வரையில் எவரேனும் ஒருவர் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். வளங்கள் சுரண்டப்படுவது நேரடியாகத்தான் நிகழ வேண்டும் என்பதில்லை. முற்காலத்தில் படையெடுப்பு என்று வந்தார்கள். இப்பொழுதெல்லாம் கூடிக்கெடுக்கும் தந்திரம்தான். அதற்கு அடிப்படை உங்களின் அறியாமை.

தமிழ்நாட்டின் உற்பத்தியையும், இங்கு பெருக்கப்பட்ட பணத்தையும், அண்டை மாநிலங்களில் இருக்கும் சபரி மலையிலும், திருப்பதியிலும் எந்தவித மறுகொள்முதலும் இல்லாது கொட்டிவிட்டு வருகின்றீர்கள். கேட்டால், அன்னாரின் அருள் கிடைக்கும் என்பீர்கள். நீ ஏன் எங்கள் நம்பிக்கையில் குறுக்கிடுகிறாய் என்றும் திரித்துக் குரல் எழுப்புவீர்கள்.

ஒரு நடிகரின் நடிப்பிற்கு கோடிக்கணக்கில் சம்பளம். எல்லாம் மக்களாகிய நம் பணம். அந்தப் பணம் எல்லாம் எங்கே போயின? தமிழ்நாட்டில் ஏதேனும் வளர்ச்சிப்பணிகளுக்காக அவை செலவழிக்கப்பட்டனவா? உயிரைக்கொடுக்கும் ரசிகர்களாகிய உங்களுக்கு ஏதேனும் உதவியாக இருந்திருக்கின்றதா? திருமணம் செய்து வைக்கிறார், சமூக சேவை செய்கிறார் என்ற சமாளிப்பிற்கெல்லாம் ஏமாந்து போகாதீர்கள்.

"வாங்குங் கவளத்தொரு சிறிது வாய் தப்பின் தூங்குங் களிறோ துயருறா..." என்ற நீதிநெறிப்பாடல் தெரியுமா உங்களுக்கு? பல கோடிகளில் இறைக்கப்படும் சில்லறைகள் உங்களைத் திருப்திப்படுத்திட போதும் என்பது ஒரு இழிநிலை. அவர் பணம் அவர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்வார். அதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், எத்தனை பேர் அடுத்த வேளை உணவிற்கு வழி இல்லா விட்டாலும், கடன் பட்டாவது முதல் நாள் அதிக விலை கொடுத்து நுழைவுச் சீட்டு பெற்று அவரது திரைப்படத்தை பார்க்கின்றனர்.

செய்தி ஒன்றில் படித்தேன், வீட்டில் இருக்கும் நகையைத் திருடி ஆயிரம் ரூபாய்க்கும் மேல் செலவு செய்து ஒரு சிறுவன் படம் பார்த்திருக்கிறான். என் நண்பர் ஒருவர், அவர் மனைவி குழந்தைகளோடு அன்றைக்கு கோயிலுக்குப் போகலாம் என்று திட்டம் போட்டுவிட்டு, இவர் பாட்டுக்கு லிங்கா திரைப்படம் பார்க்கப் போய் விட்டார்.

உருவப்படத்திற்கு பாலாபிஷேகம், வெடிகள், வெற்றுக்கூச்சல்கள், சண்டை சச்சரவுகள், கூட்டநெரிசலில் உயிர்ப்பலி, எத்தனை எத்தனை....

இப்படி தனிமனித இழப்புகள் நிறைய உள்ளன. சரி, முதல் நாளே போய்ப் பாருங்கள். உங்கள் ஆர்வம் எனக்கொள்ளலாம். ஆனால், எதற்காக அதிகக் கட்டணம் கொடுத்துப் பார்க்க வேண்டும்? என்றைக்காவது யோசித்திருக்கின்றீர்களா? இங்கேதான் உங்கள் உழைப்பு, உங்கள் நேரம், உங்கள் பணம் உங்களுக்கே தெரியாமல் உங்களிடமிருந்து சுரண்டப்படுகின்றது.

இப்படி ஒவ்வொருத்தருடையதாகச் சுரண்டப்படுவதுதான் ஒட்டுமொத்த மாநிலத்தினுடையதும் சுரண்டப்படுகின்றது. நிற்க இது மாநிலப் பிரச்சனையாகச் சொல்லவரவில்லை. மொத்தத்தில் ஒரு இடத்தின் வளம் அநியாயமாக அறியாமையினால் சுரண்டப்படுகின்றது.

ரஜினி, அவர் சம்பாதித்த பணத்தை என்ன செய்தார் என்று ஒரு நாள் எவரேனும் வெளிப்படுத்துகையில் எல்லோரும் அவரை இகழ்வீர்கள். அப்பொழுது கூட நீங்கள் செய்த தவற்றினைச் சற்றேனும் சிந்தித்துப் பார்க்க மாட்டீர்கள்.

என்னதான் செய்வது? அதிகக் கட்டணம் கொடுத்து முதல் நாளே திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். நடிகர்களை நடிகர்களாக மட்டும் பாருங்கள். அவர்கள் உங்களைக் காக்க வந்த ஆபத்பாந்தவர்கள் இல்லை. அவர்கள் உங்களுக்கான வழிகாட்டியும் இல்லை. அவர்கள் பிழைப்பை அவர்கள் பார்க்கின்றார்கள். திரைப்படத்தில் அவர்கள் பேசும் வசனங்கள் எவரோ எழுதிக்கொடுத்ததுதான். உங்கள் ரசனையை, கைதட்டல்களை அவர்கள் காசாக்கிக் கொள்கின்றார்கள். உங்களை வழிப்படுத்தவோ பண்படுத்தவோ அந்த வசனங்களை அவர்கள் பேசுவதில்லை.

மறுபடியும் சொல்கிறேன், இது ரஜினியைத் தாக்கும் அல்லது விமர்சிக்கும் பதிவல்ல. உங்களின் மடத்தனங்களைச் சுட்டிக்காட்டும் பதிவுதான் இது. வாய்ப்பு இருக்கின்றவன் சம்பாதிக்கும் மட்டும் சம்பாதித்துக் கொள்ளட்டும் என்கிற கொள்கை உடைய நாட்டில் வாய்ப்பில்லாதவன் வாய் பார்த்துக்கொண்டே கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றானே என்ற ஆதங்கத்தில் எழுதுவது.

பெரும்பாலோரை இதனைப் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக ரஜினியின் படத்தைப் பயன்படுத்த வேண்டியதாகிவிட்டது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக