சவூதி அரேபியாவில், முகாம்களில் இருக்கும் இலங்கையர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவிற்கு சென்று பல்வேற காரணங்களால் நிர்க்கதிக்குள்ளாகிய நிலையில் நாட்டுக்கு வர முடியாமல், அந்த நாட்டு நலன்புரி முகாம்களில் நீண்டகாலமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள், மீண்டும் நாடு திரும்புவதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு ஒன்றை ஏற்படுத்துவதற்கு சவூதி அரசாங்கம் இணக்கம்
தெரிவித்துள்ளது.
வெளிவிவகார பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ச டி சில்வா அண்மையில் சவூதி அரேபியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, அந்த நாட்டு தொழில் மற்றும் உள்துறை பிரதியமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக சவூதி அரேபியா இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
இதுதவிர சவூதி அரேபியாவில் பணி புரியும் இலங்கையர்கள் குறித்த தகவல்களை இலங்கையுடன் அவ்வப்போது பரிமாறிக்கொள்ளவும், இலங்கையர்களின் நலன்புரி விடயங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது குறித்தும் அந்த நாட்டு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
அத்துடன் அந்த நாட்டின் சமூக சேவைகள் அமைச்சர் மற்றும் பொது சுகாதார பிரதியமைச்சர் ஆகியோருடனும் பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
சவூதியில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள, மருத்துவ உதவி தேவைப்படும் இலங்கை தொழிலாளர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்குதல் மற்றும் சவூதியில் இறந்து போகும் இலங்கையர்களின் உடல்களை இலங்கைக்கு விரைவாக எடுத்து வருவதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குவது என்பன குறித்தும் இந்த பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக