siruppiddy

புதன், 28 ஆகஸ்ட், 2013

தலைவாசல் >> சினிமா >> வரலாறு

 
கதை, வசனம், பாடல், இசை அமைப்பு, 'டப்பிங்' பன்முகம் படைத்த

 திரை உலகில் அடியெடுத்து வைத்த கே. தேவநாராயணன், பின்னர் கதை- வசனம், பாடல், இசை அமைப்பு, டப்பிங் என்று பல துறைகளில் சாதனை படைத்தார். அவர் வசனம் எழுதிய படங்கள் 800-க்கு மேல்.

குறிப்பாக, இந்தி, தெலுங்கு போன்ற பிற மொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட புராணப்படங்களுக்கு இவர் எழுதிய வசனங்கள் புகழ் பெற்றவை.


கே.தேவநாராயணனின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி. தந்தை பெயர் டி.குளத்து அய்யர். தாயார் சிவகாமி அம்மாள்.


1925-ல் பிறந்த தேவநாராயணன், காரைக்குடி எஸ்.எம்.எஸ். வித்யா சாலையில் கல்வி பயின்றார். ஏவி.மெய்யப்ப செட்டியார் படித்ததும் இதே பள்ளியில்தான்.


படிக்கும்போதே நடிப்பதிலும், பாடல் எழுதுவதிலும், பாடுவதிலும் திறமை பெற்றிருந்தார், தேவநாராயணன்.


பள்ளியில் நடந்த "ராஜபக்தி'' என்ற நாடகத்தில் தேவநாராயணன் நடித்தார். அதை பட அதிபர் லட்சுமணன் செட்டியார் (பிற்காலத்தில் எம்.ஜி.ஆர். நடித்த மதுரை வீரன் படத்தை எடுத்தவர்) பார்த்தார். தேவநாராயணனின் நடிப்பு அவருக்குப் பிடித்துப்போகவே, அப்போது அவர் தயாரித்து வந்த "கிருஷ்ணன் தூது'' படத்தில் துரியோதனன் தம்பி விகர்ணனாக நடிக்க வைத்தார்.


அதன்பின், ஏவி.எம். தயாரித்த "சபாபதி'' படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரனின் பள்ளித் தோழராக நடித்தார்.


1947-ல், "ராமராஜ்யா'' என்ற இந்திப்படம் வெளிவந்து, இந்தியா முழுவதும் சக்கை போடு போட்டது. மகாத்மா காந்தி பார்த்த ஒரே திரைப்படம் என்ற பெருமையை பெற்ற படம் இது.


இப்படத்தை தமிழில் "டப்'' செய்து வெளியிட ஏவி.மெய்யப்ப செட்டியார் தீர்மானித்தார்.


தேவநாராயணன் வசனம் எழுதிய "குளத்தங்கரை அரசமரம்'' என்ற நாடகத்தை ஏவி.எம். பார்த்தார். வசனங்கள் அவருக்கு மிகவும் பிடித்திருந்தன. தேவநாராயணனுக்கு இந்தி நன்றாகத் தெரியும். ஆதலால், "ராம்ராஜ்யா''வுக்கு தமிழில் வசனம் எழுதும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார்.


"ராம்ராஜ்யா''வில் பிரேம் அதீப், சோபனா சமரத் (நடிகை நூடனின் தாயார்) ஆகியோர் நடித்திருந்தனர். அதற்கு அற்புதமாக வசனம் எழுதிய தேவநாராயணன், பாடல்களையும் எழுதினார். 2 பாடல்களை அவரே பாடினார்.


"டப்'' செய்யப்பட்ட "ராமராஜ்யம்'', அசல் தமிழ்ப்படங் களுக்கு இணையாக ஓடியது.


இந்தப் படத்தின் மூலம் வசனகர்த்தா, பாடல் ஆசிரியர், பாடகர் என்று புகழ் பெற்றார் தேவநாராயணன்.


ராமராஜ்யம் பட வேலைகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டிருந்தபோது, "தியாகி'' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு வந்தது. (இந்தப் படத்தின் கதாநாயகி வி.என்.ஜானகி)


ஏற்கனவே ராமராஜ்யத்தில் பணியாற்றி வந்ததால், இந்த வாய்ப்பை ஏற்கவில்லை.


"ராமராஜ்யம்'' படத்தின் வெற்றி, தேவநாராயணன் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை உண்டாக்கியது.


மொழிமாற்றப் படங்களுக்கு வசனம் எழுதவும், குரல் கொடுக்கவும், ஏராளமான வாய்ப்புகள் வந்தன.


பானுமதியின் "லைலா மஜ்னு'', "விப்ரநாராயணா'' ஆகிய படங்களில், ஏ.நாகேஸ்வரராவுக்கு குரல் கொடுத்தார்.


அறிஞர் அண்ணாவின் "ஓர் இரவு'' நாடகத்தை ஏவி.எம். நிறுவனம் படமாகத் தயாரித்தது. கே.ஆர்.ராமசாமி, லலிதா ஆகியோர் நடித்த இப்படத்தில், இரண்டாவது ஹீரோவாக நாகேஸ்வரராவ் நடித்தார். "இந்தப் படத்தில் நானே தமிழில் பேசுகிறேன். டப்பிங் கூடாது'' என்று நாகேஸ்வரராவ் கூறினார். ஆனால் அவர் உச்சரிப்பு அப்போது திருப்திகரமாக இல்லாததால், தேவநாராயணனை பேச வைத்து படத்தை முடித்தார்கள்.


இது நாகேஸ்வரராவுக்கு அப்போது தெரியாது. படத்தைப் பார்த்தபின், "பொருத்தமான குரலை பயன்படுத்தி இருக்கிறீர்கள். எனக்கு திருப்தி'' என்று ஏவி.எம்.மிடம் நாகேஸ்வரராவ் கூறினார்.


இதற்கிடையே, "கனவு'' என்ற நேரடி தமிழ்ப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதினார், தேவநாராயணன். இப்படத்தில் லலிதாவும், வி.கே.ராமசாமியும் இணைந்து நடித்தார்கள்.


கமலஹாசன் நடித்த பல தெலுங்கு, மலையாளப் படங்களுக்கு தேவநாராயணன் வசனம் எழுதியுள்ளார்.


அதுபற்றி அவர் கூறியதாவது:-
சாகரசங்கமம் தெலுங்குப் படம்தான், தமிழில் சலங்கை ஒலி என்ற பெயரில் வெளிவந்தது.
அதற்கு வசனம் எழுதும் நேரத்தில், எனக்கு உடல் நலம் இல்லை. படத்தை, குறிப்பிட்ட காலத்தில் முடிக்க வேண்டி இருந்தது.

கமல், தியேட்டருக்கு வருவார். படத்தைப் போட்டுக் காட்டுவார்கள். தெலுங்கு உரையாடலைப் பார்த்து, அதை உள்வாங்கிக் கொண்டு, கருத்து மாறாமல், உணர்ச்சி குறையாமல் வசனத்தைச் சொல்வேன். கமல் உடனே அதை உணர்ச்சியுடன் பேசிவிடுவார்.

படம் அற்புதமாக அமைந்து நன்றாக ஓடியது. அது நான் வசனம் "எழுதிய'' படம் என்று சொல்வதைவிட, வசனம் "சொல்லிய'' படம் என்று கூறுவதே பொருத்தம்.

இதன் பிறகு விசுவநாத்தின் "சுவாதி முத்தியம்'' என்ற தெலுங்குப் படத்தில் கமலஹாசனும், ராதிகாவும் நடித்தனர். அந்தப் படம் "சிப்பிக்குள் முத்து'' என்ற பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டது. அந்தப் படத்துக்கும் நான் வசனம் எழுதினேன்.

கமல் எடுத்த "சத்யா'' படத்தில் தந்தை வேடத்துக்கு நான்தான் பேசவேண்டும் என்று என்னை அழைத்தார். பெங்களூரில் ஜி.வி.அய்யர் படத்தில் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்தேன். கமல் அழைப்பை ஏற்று, உடனே வந்து "டப்பிங்'' பேசினேன்.

அவருடைய "பாசவலை''க்கு எழுதினேன். தமிழில் நேரடியாகத் தயாரித்த "குருதிப்புனல்'' படத்துக்கும் எழுதினேன்.

கமலுடன் பணியாற்றுவது மன நிறைவு தரும் அனுபவம். அடுத்தவர் திறமையை அறிந்து பாராட்டும் குணம், இயல்பாகவே அவருக்கு இறைவன் கொடுத்த வரம்.''

இவ்வாறு தேவநாராயணன் கூறினார்,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக