சட்டவிரோதமான முறையில் இந்தியாவின் கொச்சினுக்கு தங்கம் கடத்திச் செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடத்திச் செல்ல முயன்ற தங்கத்தின் மொத்தப் பெறுமதி 27 இலட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான ஆணொருவரும், 46 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஆண் 350 கிராம் நிறைகொண்ட இரண்டு தங்க பிஸ்கட்டுக்களை மலவாயில் வைத்து கடத்திச் செல்ல முயன்றுள்ளார்.
மேலும் அவருடன் வந்த பெண் 200 கிராம் நிறைகொண்ட தங்கத்தினால் செய்யப்பட்டு வெள்ளி முலாம் பூசப்பட்ட கொலுசுகளை கால்களில் அணிந்து கடத்திச் செல்ல முயன்றுள்ளார்.
இவர்கள் இருவரும் இன்று காலை 7 மணியளவில் இந்தியாவின் கொச்சின் நோக்கி செல்லும் ஸ்ரீலங்கன் எயார் யு.எல் 165 விமானத்தில் பயணிக்கும் பொருட்டு விமானநிலையத்திற்கு வந்துள்ளனர்.
எனினும் இவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது தங்கம் கடத்திச் செல்லவிருந்தமை தெரியவந்துள்ளது.
பின்னர் இவர்கள் கடத்திச் செல்ல முயன்ற தங்கத்தை கைப்பற்றிய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக